Index ¦ Archives

புத்தக வாசிப்பு

மூன்று வருடங்களுக்கு முன்னால் என்னுடைய வாழ்க்கை என்பது இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கையாகவே இருந்தது. கையில் ஒன்றும், காதில் இரண்டும், மேஜையில் ஒன்றுமாய் ஸ்மார்ட்ஃபோன், மடிக்கணினி என்று அதிலேயே மூழ்கிக் கிடந்தேன். நான் சுயமாகச் சிந்தித்து ஏற்றுக் கொண்ட கருத்து என்று எப்போதுமே இருந்ததில்லை.

காரணம், சமூக வலைதளங்களில் முகம் தெரியாத, தெரிந்த நபர்கள் என்ன பகிர்கிறார்களோ அதுவே பெரும்பான்மை கருத்தாக மாறி மாறிப் பலரைப் போல் என் மூளைக்குள்ளும் புகுந்துவிடும். அதை என் நட்பு வட்டங்களுக்கும் பகிர்ந்துவிடுவேன். அதைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் (அது உண்மையா பொய்யா என்று தெரியாமலும்) படித்த நேரத்தில் பிடித்திருப்பது போல் தோன்றினால் பகிர்ந்துவிடுவேன்.

ஒருவர் ஒரு கருத்தைச் சரி என்பார், மற்றொருவர் தவறென்பார். சரி என்று சொன்னவரின் கருத்தைப் படித்தால் சரியாகத்தானே இருக்கிறது என்றும், தவறென்று சொல்பவரின் கருத்தைப் படித்தால் முன்னவர் சொன்னது தவறு என்பது போல் தோன்றும். யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு என்று பகுப்பாய்வு செய்யும் திறனைச் சமூக வலைதளங்கள் வளர்க்கவில்லை. மாறாகத் தொடர்ந்து அடுத்தடுத்த கருத்துக்களையும், செய்திகளையும் நம் கண்முன்னே ஓடவிட்டுக் கொண்டே இருக்கும்.

தன்னை சுற்றி நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் 140 எழுத்துக்களில் சுருக்கிட விரும்புகிறான் (திருக்குறள் 2 அடிதான் ஆனால் அதன் அர்த்தம் எவ்வுளவு பெரியது என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். அதன் பெரிய அர்த்தத்தை நாம் புரிந்துக்கொண்டால் தானே அந்தச் சிறிய 2 அடியின் முக்கியத்துவம் நமக்குத் தெரியும்!). இதன் விளைவு, ஒரு குழப்பமான மனிதன் உருவாக்கப்படுகிறான், யாரையும், எதன் மீதும் ஒரு நம்பிக்கை இல்லாமல் போகிறான். கேள்விகளை கேட்காமல் தகவல்களை கடந்து செல்லும் தகவல் நுகர்வு வெறி கலாச்சாரத்திற்கு அடிமையாகிறான். சமூக வலைதளங்கள்மூலம் 1000 நண்பர்களோடு சோஷியலைஸ் (Socialize), அதாவது சமூகத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒரு மாயையில் சிக்கி, தன்னைச் சுற்றியுள்ள உண்மையான சமூகத்திலிருந்து அறுத்தெரியப்படுகிறான்.

தன்னைச் சுற்றி வறுமையும், வேலைவாய்பின்மையும், சாதி, மதம் பெயரால் சமூக அநீதிகளும், சுரண்டல்களும், பாலின சமத்துவமின்மை, கடும் விலைவாசி உயர்வு என்று பல்வேறு அநீதிகள் நடந்துக் கொண்டிருக்கையில், மதம் ஒரு அபின் (போதை) போன்றது என்று தத்துவஞாநி கார்ல் மார்க்ஸ் அன்று சொன்னது போல இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் இன்றைய அபினாக மாறியிருக்கிறதோ என்று தோன்றுகிறது!

இது போதாதென்று கமெர்ஷியல் சினிமா, ரியாலிட்டி ஷோ என்று தொலைக்காட்சிகளும் அதன் பங்கிற்கு மக்களை மிகவேகமாகத் திசைத்திருப்புகிறது. விளைவு? சிந்தனை என்பது மேலிருந்து கீழே மக்கள் மனதில் விதைக்கப்படுகிறது. எளிமையாகச் சொல்லவேண்டுமானால் நாம் அனைவரும் பொம்மாலாட்டத்தில் ஆடும் பொம்மைகள் ஆகிறோம். சரி யார் மேலிருந்து மக்கள் மனதில் இவற்றை விதைக்கிறார்கள்? இது போன்ற கேள்விகளைக் கேட்காமல் இருப்பதற்காகத்தானே இவ்வுளவு திசைத் திருப்பலும்.

நானும் இவற்றிற்கான பதிலைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். முயற்சியில் முன்னேற்றமும் அடைந்திருக்கிறேன். காரணம், புத்தக வாசிப்பு. புத்தக வாசிப்பு என்றதும் குங்குமம், குமுதம், ஆனந்த விடகன் என்று நினைத்துவிட வேண்டாம். வேண்டுமானால் பொழுது போக்க இப்புத்தகங்களைப் படிக்கலாம். ஆனால் சமூகத்தின் மீதும், என்னச் சுற்றி நடக்கும் காரியங்கள் ஏன் நடக்கிறது, யாரால் நடத்தப்படுகிறது, எப்படி நடக்கிறது என்ற காரண காரணிகளைப் புரிந்துக் கொள்ள உதவியது புத்தகங்கள் தான்.

முதலில் நாம் வாழும் சமூகத்தைப் புரிந்துக் கொண்டால் தான் நாம் அடுத்த செயல்களைத் திட்டமிட முடியும். அப்படி புரியாத காரணத்தால் தான், உதாரணத்திற்கு, வேலை கிடைக்கவில்லை என்றால் தனக்கு மட்டும் இந்த உலகம் இருண்டுவிட்டது போல் உணர்வதும், எதிர்காலத்தை நினைத்து ஒருவித கலக்கமும் பயமும் பற்றிக் கொள்கிறது. காரணம் தெரிந்துவிட்டால் தீர்வுகளை நோக்கிய அடியைத் தைரியமாக வைக்கலாம் அல்லவா! உலகின் வேறொரு பகுதியில் நடக்கும் ஒரு காரியத்திற்கும், நம் ஊரில் நடக்கும் ஒரு காரியத்திற்கும் தொடர்பில்லாதது போன்றும், அதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது போன்றும் தோன்றலாம், ஆனால் எதார்த்தம் வேறு, நாம் ஒரு சங்கிலித் தொடராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

உதாரணத்திற்கு,

  • சவுதியில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலோ ஏறினாலோ நம் ஊரிலும் அதற்கேற்றாற் போல் மாறுதல் நிகழ்கிறதே! ஏன்?
  • இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான் என்று பாடத்தில் படித்தாலும், விவசாயிகள் ஏன் அதிக அளவில் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் அல்லது நிலங்களை ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்று விடுகிறார்கள்?

முதலில் நாம் எதிர் கேள்விகளைக் கேட்கும் மனிதர்களாக மாற வேண்டும். அவற்றிற்கான பதில்களைத் தேட வேண்டும். அந்தத் தேடுதலில் தான், மக்கள் அனைவரும் busy-ஆகிப் போன இந்தக் காலத்தில் புத்தகம் நம்மிடம் நிறைய பேசும். அதுவும் காலம் நேரம் பார்க்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கும். நான் வாசித்த, வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி, எனக்குப் பல காரணங்களை விளங்க வைத்த புத்தகங்களைப் பற்றியும் அதே நேரத்தில் எனக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கதை கற்றுக் கொடுத்த தோழர்களைப் பற்றியும் எழுதி உங்களோடு பகிர்வது என்று முடிவு செய்துள்ளேன்.

Your Comments

© Prasanna Venkadesh. Creative Commons Attribution ShareAlike. Theme by Giulio Fidente on github.